தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும்’ என கூறி இருந்தது.

அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது’ என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு இதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த உத்தரவுக்கு ஏற்றவகையில் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23-ந்தேதியும் மூடப்படும்.

இந்த உத்தரவுப்படி அனைத்து மதுபான டெப்போக்கள், கடைகள் மற்றும் பார்கள் மேற்சொன்ன நாட்களில் அடைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news