தமிழகம், கேரள மாநிலங்களின் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது – தண்னீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியில் சென்று வர முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக அடிக்கிறது. இந்த வெப்பம் இரவிலும் நீடிப்பதால் மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலமும் அடங்கும்.

கேரள மாநிலத்தை பொறுத்தவரை, தினமும் வெயில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்ட மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மக்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிக தண்ணீர் குடித்தல் உள்ளிட்டவைகளை கடைபிடித்தாலும் வெப்ப பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் தற் போதைய நிலவரப்படி 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் உளள 42 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் 8.865 பில்லியன் கன மீட்டர்கள் அளவே தண்ணீர் இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நீர்த்தேக்கங்களில் இந்த நேரத்தில் 29 சதவீதம் தண்ணீர் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நேரத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு 17 சதவீதமாக குறைந்திருப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools