தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் அறிவிப்பு ஒரு வகையில் லஞ்சம் தான்! – சீமான் தாக்கு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட 40 பேர் இறந்து உள்ளனர். இது மன்னிக்க முடியாத செயல். அவர்களின் தேவை, நோக்கம் என்னவென்று தெரியவில்லை. 350 கிலோ வெடிமருந்தை ஏற்றி கொண்டு அந்த வாகனம் வரும் வரை சோதனை சாவடிகள் இருந்ததா, இல்லையா? உளவு கட்டமைப்பு நமது நாட்டில் இருக்கிறதா, இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டில் மக்களை தான் அச்சுறுத்தி வைத்து உள்ளனர். ஆனால் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது ஒருவித லஞ்சம் தான். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் நிலை தான் இருக்கிறது என்றால், என் தேசம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்று பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.

ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. ஆட்சியையே அவர்கள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தனித்து தேர்தலை சந்திக்க மாட்டார்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். எல்லா கட்சிகளும் வெற்றியை நோக்கி தான் செல்கிறார்கள். நாங்கள் தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை ஏற்க மறுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools