தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – அன்புமணி ராமதாஸிடம் மத்திய அமைச்சர் கூறினார்

பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் ராமேசுவரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர், அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய மந்திரியிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விளக்கி கூறினார்.

தமிழக மீனவர்கள் கொரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறை பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இத்தகைய அவலமான சூழலில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கவலை தெரிவித்த மத்திய மந்திரி, தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், வெகுவிரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools