தமிழக முதலமைச்சருக்கு ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் கோரிக்கை

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

‘திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.

அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.

அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள். தயவுகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.

விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்… திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools