X

தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்திற்கு விருது

தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான, வழிகாட்டி( GUIDANCE)நிறுவனம், ஆசியா-ஓசியானியா மண்டலத்தின் “சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமைக்கான”
விருதை வென்றுள்ளது. இவ்விருதினை பெற்றதற்காக தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், வழிகாட்டி
நிறுவனத்திற்கு கிடைத்த இத்தகைய பெருமைமிகு அங்கீகாரம், தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளதை, உலகளாவிய மன்றங்களில் காட்சிப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார அமைச்சகம், ஆண்டுதோறும், முதலீட்டிற்கான வருடாந்திர சந்திப்பு (Annual Investment Meet – AIM) நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும், இந்தச்
சந்திப்பின் முடிவில், உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளைத் தேர்ந்தெடுத்து இவ்விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு, தொழில் துறையின் சார்பாக
வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பூஜா குல்கர்னி, இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு தொழில் துறையின் அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைகளின்படியும், தொழில் துறை அமைச்சரின்
வழிகாட்டுதல்களின்படியும், தொழில் துறையின் கீழ் இயங்கும் வழிகாட்டி நிறுவனத்தில், ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, நிதி நுட்பக்குழு மற்றும் பணி ஆய்வகக் குழு மற்றும் நாடுகள் வாரியான
தனித்தனி அமைவுகள் போன்ற பல்வேறு குழுக்களை அமைத்து இந்நிறுவனம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் தொழில் முதலீடுகளை
ஈர்த்திடவும், சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், தொழில் துறைக்கான வருங்கால திட்டங்கள் மற்றும் Industry 4.0-ற்கு, பணியாளர்களை தயார் செய்தல் போன்ற
முன்முயற்சிகளில் கவனம் செலுத்திடும் வகையில் உலகப் பொருளாதார மன்றத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அளவில் முதலாவதாக, தமிழ்நாட்டில் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையத்தை (Advanced
Manufacturing Hub) வழிகாட்டி நிறுவனம் அமைத்துள்ளது.

இது மட்டுமின்றி, 2021-ம் ஆண்டில், தமிழ்நாட்டில், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் மானியம், வழிகாட்டி நிறுவனம் மூலமாக
புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வணிகச் சூழலை மேம்படுத்தி வணிகம் புரிதலை எளிதாக்கும் வகையில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்களின் தொழில் திட்டங்களை நிறுவுவதற்கு காகிதமற்ற மற்றும் நேரடி
தொடர்பற்ற முறையில், அரசு-வணிகம் சார்ந்த சேவைகளை, வழிகாட்டி நிறுவனம், தனது தமிழ்நாடு “ஒற்றைச் சாளர இணையதளம்” மூலம் வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி,
தொழிலகங்களுக்கு பிரத்யேகமாக குறை தீர்ப்பு உதவி வழங்கிட “தொழில் நண்பன்” (Biz Buddy), தொழில் நிலம் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில்
“நிலத் தகவல் இணையதளம்” போன்ற இணையவழி சேவைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளச்சிக்கு தமிழ்நாடு அரசு தொழில் துறை நிறுவனமான “வழிகாட்டி” பெரும் பங்காற்றி வருவது
குறிப்பிடத்தக்கது.