தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டவரால் கி.பி.1620-ல் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இரண்டு தளங்களில் உள்ளன. மேல் தளத்தில் கவர்னர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அறையும், கீழ் தளத்தில் பண்டகசாலை, சிறைச்சாலை, சமையல் அறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள், குதிரை லாயம், வெடிமருந்து கிடங்கு ஆகியவையும் உள்ளன.

கோட்டையின் உட்புறத்தில் புல்வெளி தளம், முதல் தளத்தை பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. டேனிஷ் காலப்பொருட்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், பழைய பீரங்கிகள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. டேனிஷ் கோட்டையும், அருங்காட்சியகமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் வெளிப்புறத்தில் கட்டப்பட்டுள்ள அலைதடுப்பு சுவரின் ஒருபகுதி சேதமடைந்து இடிந்தது. கோட்டையும், கடல் அரிப்பின் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ளது. டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அலை தடுப்பு சுவரின் ஒரு பகுதி, கடந்த ஆண்டு ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக ஏற்பட்ட கடல் அலைகளின் கடும் சீற்றத்தால் சேதம் அடைந்தது. தற்போதைய தொடர் மழையின் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு சுவரின் மற்றொரு பகுதியும் தற்போது சேதம் அடைந்துள்ளது.
இடிந்து விழுந்தது.

இது தவிர, கோட்டை மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்த முள்வேலி தடுப்பு சுவரும் சேதம் அடைந்துள்ளது. டேனிஷ் கோட்டை எதிரில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் கடல் சீற்றம் காரணமாக  டேனிஷ் கோட்டையின் அருகே கடல் அரிப்பு அதிகரித்தபடி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோட்டைமதில் சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வீசி வந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து சுமார் 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது.

தற்போது தடுப்பு சுவருக்கு அருகே கடல் அலைகள் வந்து செல்கின்றன. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டை சுவர்களையும் அலைகள் தாக்கும் நிலை ஏற்படும். எனவே டேனிஷ் கோட்டையை பாதுகாக்க வேண்டும் என்று டென்மார்க் நாட்டில் இயங்கி வரும் ‘‘டேனிஷ் – டிராங்குபார் அசோசியேஷன்” என்ற அமைப்பின் தலைவர் பவுல் பீட்டர்சன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools