தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும் – அண்ணாமலை அறிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், 2-வது முறையும், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன், பணிக்காக காத்திருக்கும்போது, இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம் நிரப்பப் போவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும். மாநில அரசு, தற்காலிக பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? கல்வித்துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களை, அந்த பணியிடங்களில் முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நியமிக்க வேண்டும்.

நாங்கள் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்கை, நீங்கள் சொன்ன சொல்லை, நீங்கள் மக்களுக்கு தந்த உத்தரவாதத்தை, நீங்கள் சொன்ன உறுதிமொழியை உங்களால் நிறைவேற்ற முடியாதா? எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மாநில அரசு, இந்த வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மாணவர்களின் கல்வியோடு தொடர்ந்து விளையாடிக் கொண்டிப்பதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools