தாய் ஷோபாவை நடிகர் விஜய் அவமதித்தாரா? – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அந்த பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்து இருந்தார்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். அதற்காகவே இந்த விளக்கம்.

நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளேயே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள். அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏனெனில் எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யும் அவருடைய தாயும் எப்பொழுதும் போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, மனக்கசப்பும் இல்லை.

அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்ததாக பொய்யான ஒரு தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன். இதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools