X

திருவாரூர் இடைத்தேர்தல் – நாளை மனுதாக்கல் துவக்கம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.