தீபாவளிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகிறது

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. முன்னதாக நவம்பர் 9-ந் தேதியே (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ந் தேதியில் இருந்து ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ந் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந் தேதியும், 13-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந் தேதியும், 14-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந் தேதியும், 15-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந் தேதியும், 16-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ந் தேதியும், 17-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ந் தேதியும், 18-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ந் தேதியும் பயணம் செய்ய முடியும்.

வட இந்திய ரெயில்களுக்கான முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது 2 நாட்கள் மாறுதல் இருக்கலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news