X

தீபாவளி சிறப்பு பேருந்துகள் டிக்கெட் முன் பதிவு தொடங்கியது

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் முன்பதிவு இன்று தொடங்கியது.

முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் மெப்சில் 2 சிறப்பு கவுண்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் பஸ் நிலையத்தில் தலா ஒரு சிறப்பு கவுண்டர்களும் என மொத்தம் 30 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடுக்கு நேரில் சென்று சிறப்பு முன்பதிவு மையங்களை தொடங்கி வைத்தார். வெளியூர் செல்லும் பயணிகள் சிறப்பு கவுண்டரில் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றனர்.

தீபாவளிக்காக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3 நாட்களுக்கு மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் இவற்றுக்கு முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.

பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பஸ்களும், திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களுக்கு 1,165 பஸ்களும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு உதவுவதற்காக போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தெந்த பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் விவரம், எப்போது பஸ் புறப்படும் ஆகிய தகவல்களையும் அவ்வப்போது ஒலிபெருக்கியிலும் அறிவித்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்பட்டு பஸ்கள் தடையின்றி வந்து செல்ல உதவி செய்து வருகின்றனர்.

Tags: south news