X

துப்பாக்கி சூடு நடத்தியவர்களை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் – கமல்ஹாசன் பேச்சு

நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமல வேல் மகாலில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி என்றால் துப்பாக்கி சூடும், அரசின் அராஜகமும் தான் நினைவுக்கு வருகிறது. தூத்துக்குடியை பொறுத்தவரை ஆலை வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகள் வேண்டாம். இங்கு மக்களுக்கு வந்த நோய்கள் அரசின் அஜாக்கிரதையால் வந்தது.

மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஒரு கட்சி அனுமதி வழங்கியது. மற்றொரு கட்சி விரிவாக்கம் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் தொழிற்சாலையை இயங்க அனுமதித்தது. யார் பிரதமராக வந்தாலும் தமிழகத்தை நசுக்க முடியாது. 1,000 பேர் இறப்பதை தடுக்க 13 பேர் இறந்து உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே துப்பாக்கி சூட்டை நடத்தியது. என்னை போன்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

நம் நாட்டின் காவல் தெய்வங்கள் ராணுவத்தினரை ஓட்டுக்காக அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் ரத்தத்தை வைத்து பிரதமர் ஓட்டு கேட்கிறார். அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். எனக்கு பல சவால்கள் உள்ளன. எனக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. நான் உழைத்தால் பார்ப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனது எஞ்சிய வாழ்க்கை மக்களாகிய உங்களுக்காகத்தான். என் வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாகட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் திறந்த காரில் நின்றவாறு கமல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தேர்தல் இந்திய நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும். இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் நிலை என்ன? டெல்லிக்கு சென்று கேள்வி கேட்டும் ஒரு பிரதிநிதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் என்னோடு பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் மக்கள் நீதிமய்யத்தை தத்தெடுத்து இருக்கிறார்கள்.

நமது மக்களுக்கு தேசிய வியாதியாக மறதி உள்ளது. இன்று நடக்கும் பெரிய பிரச்சினைகளை நாளை மறந்து விடுகிறார்கள். அது அரசியல்வாதிகளுக்கு வசதியாக போய் விடுகிறது.

தூத்துக்குடியில் கருணாநிதி மகளை விரட்டி அடித்து உள்ளனர். ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் போது அந்த கட்சியினர் உடனிருந்து உள்ளனர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் அவர்கள் ஆட்டுகிறார்கள்.

மற்றொரு கழகம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சத்தம் போட்டால் வாயிலே சுடுமாறு கூறிஉள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாகவும் கூறிஇருக்கிறார்கள். இந்த நிலை நெல்லைக்கும் வந்து விடக்கூடாது.

இந்த தேர்தலில் புரட்சிக்கு பெயர் பெற்ற பாளையங்கோட்டை மக்கள் மீண்டும் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வருகிற 18-ந்தேதி டார்ச்லைட் சின்னத்தை வெற்றி பெறச்செய்யுங்கள். முதன் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் நல்ல திசையை நோக்கி தமிழகத்தை நகர்த்த ஓட்டு போடுங்கள். வருகிற 18-ந்தேதி மக்கள் நீதிமய்யத்தை வெற்றி பெறச்செய்ய புறப்படுங்கள். இதை செய்தால் நாளை நமதே, வெற்றியும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: south news