X

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீவிபத்து – ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பல்!

தூத்துக்குடி துறைமுகச் சாலையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலைய நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில், சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பலானது.

இந்த அனல் மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் இரவு திடீரெனத் தீப்பிடித்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அனல் மின் நிலையப் பொறியாளர்களும், பணியாளா்களும் இணைந்து, அருகிலிருந்த பிற நிலக்கரி குவியல்களுக்கும், மின் உற்பத்தி அமைப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனா். சுமாா் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னா் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், இத்தொழில்நுட்ப விபத்தில் சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் மின் உற்பத்தியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என அனல் மின் நிலைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விபத்துக்கான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்துத் தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.