தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – கலெக்டர் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. இதன் இறுதி அறிக்கை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது முக்கியமான போராட்டக்குழுவினருக்கு அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசு அதிகாரிகள் அளித்த சாட்சியங்களின்படி போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து போதுமான நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். போராட்டக்குழுவினரை அடையாளம் கண்டு கைது செய்யவில்லை.

அமைதியை சீர்குலைக்கும் வகையிலான விஷமிகளை அடையாளம் கண்டு அவர்களை தடுப்பு காவலில் வைத்து இருக்க வேண்டும். அது போன்று செய்து இருந்தால் போராட்டக்காரர்கள் முயற்சியை முடக்கும் விதமாக அந்த நடவடிக்கை இருந்து இருக்கும். ஆனால் காவலர்கள் அப்படியான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக எந்த சான்றும் இல்லை. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் குறைபாடாகும்.

மாநில உளவுத்துறை போராட்டம் பற்றி அறிந்து தகவல் தெரிவித்தும் காவல்துறை தொடர் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. மாவட்ட நிர்வாகம், போலீசார் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அலுவலர்களும், காவல்துறையினரும் கலவர சூழ்நிலையை கையாள்வதற்கு ஏதுவாக எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை.

மாவட்ட நிர்வாகம் காலதாமதமாக பிறப்பித்த தடை உத்தரவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையில் இருந்ததால் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியது.

போராட்டக்காரர்களை தடுப்பதற்கு போதுமான வகையிலான வஜிரா வாகனங்களை வரவழைக்காததும், போராட்டக்காரர்களை கலைய செய்ய தவறியதும் மிகப்பெரிய தவறாகும். போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்தபோது முதல் முறையாக போலீசாருடன் மோதல் ஏற்பட்ட நேரத்தில் ஒரே ஒரு வஜ்ரா வாகனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்ததையடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்பட்டமாக விதிமீறல் நடந்துள்ளது. இறந்து போனவர்களின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வெளியேறிய விதத்தை வைத்து அதை தெரிந்து கொள்ளலாம். தலையின் பின்புறம் வழியாகவும், முதுகு பகுதியிலும், இதயம் மற்றும் மார்பு பகுதியிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை உயர் அதிகாரிகள் செய்ய தவறி விட்டனர். ஆட்சியர் வளாகத்துக்கு உள்ளேயே டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், துணை சூப்பிரண்டு லிங்க திருமாறன் ஆகியோரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவுக்கு தெரியவில்லை. டி.ஐ.ஜி. அதிகாரத்தை எடுத்துக் கொண்டு துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறார். இந்த நிகழ்வை பொறுத்தமட்டில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மிகவும் கொடுமையானது என்று இந்த ஆணையம் கருதுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare