தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க தயார் – கனிமொழி

தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை.

கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:- கலைஞர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறீர்களே?

பதில்:- கலைஞர் இல்லை என்பது எல்லோருக்குமே பாதிப்புதான். தனிப்பட்ட முறையில் தந்தை என்கிற வகையில் எனக்கு பெரிய வலியையும், வருத்தத்தையும உருவாக்கி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவராக கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக எனக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கே:- தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறதே?

:- இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பா.ஜனதா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் சந்திக்கலாம்.

கே:- தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா?

:- பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news