தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் நவம்பர் 9 ஆம் தேதி புறப்படுகிறது

தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு திண்டுக்கல்லில் தெரிவித்ததாவது:-

இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி இந்த சுற்றுலா பயணம் தொடங்குகிறது.

தீபாவளியன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும். இந்த ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், ஒரு பேட்டரிகார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகிறது.

தென்காசியில் புறப்படும் இந்த ரெயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக செல்லும் நவம்பர் 16-ந் தேதி ராமேஸ்வரம் வந்து பின்னர் 17-ந் தேதி தென்காசி வந்தடையும்.

பயண கட்டணமாக படுக்கை வசதிக்கு ரூ.16,850ம், மூன்றடுக்கு ஏசி வகுப்புகளுக்கு ரூ.30,500ம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏசி மற்றும் ஏசி வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

மேலும் மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும். மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news