தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 149 ரன்னிலும் சுருண்டு சொந்த மண்ணில் 3-வது நாளுக்குள் தோல்வியை தழுவியது. அந்த அணி மொத்தம் 82.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. ஆலி போப் (73 ரன்) தவிர யாரும் அரைசதத்தை கூட எட்டவில்லை.

தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர கலக்கியது. 7 விக்கெட்டுகளை சாய்த்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த நிலையில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆலி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல் ஆட்டத்தில் செலுத்திய ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து எழுச்சி பெற இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். எனவே இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools