X

தேர்தல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் – காரசார விவாதம் நடைபெற்றது

வாக்களர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-வை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ”ஆதார் அடையாள அட்டை என்பது ஒரு வசிப்பட சான்று. அது குடியுரிமைக்கான சான்று கிடையாது. ஆதார் எண்ணை வாக்களர் பட்டியலில் இணைப்பதன் மூலம் குடிமக்கள் அல்லாதவர்களும் வாக்களிக்கும் உரிமையை இந்த சட்ட மசோதா வழங்குகிறது” என கூறினார்.

இதை தொடர்ந்து புதிய சட்ட திருத்தத்திற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த சட்ட திருத்தம் குறித்து சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-

இந்த மசோதா வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோரிடம் அவா்களின் ஆதாா் எண்ணைத் தோ்தல் அதிகாரிகள் கேட்பதற்கு அனுமதி அளிக்கிறது. ஏற்கனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே ஆதாா் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும்.

இந்த மசோதா, ஆதாா் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக்கொள்ள மறுக்காது. மேலும் ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருப்பவா்களின் பெயரையும் நீக்க இந்த மசோதா அனுமதிக்காது. ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் அடையாள சான்றாக வேறு ஏதேனும் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கலாம்.

தற்போதைய நடைமுறையின்படி ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை அடைந்தவர்கள் மட்டுமே புதிய வாக்காளா்களாக பதிவு செய்யலாம். அதன் பிறகு 18 வயதை அடைந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த புதிய மசோதாவில்  ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளைத் தகுதி நாட்களாக கொண்டு வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 14-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இன்றைய நடைமுறையில் பணி நிமித்தமாக ராணுவ வீரா் ஒருவர் வெளியூா் சென்றுவிட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும். ஆனால், பெண் ராணுவ அலுவலர் ஊரில் இல்லாவிட்டால் அவருக்கு பதில் கணவரால் வாக்களிக்க முடியாது. இதை மாற்றி கணவரும் வாக்களிக்கும் வகையில், சட்டப் பிரிவில் ‘மனைவி’ என்ற வாா்த்தைக்குப் பதிலாக ‘வாழ்க்கை துணைவா்’ என்ற வாா்த்தையை சேர்க்கும் வகையில் ஆா்.பி. சட்டம், 1950-இன் 20-ஆவது பிரிவு, ஆா்.பி.சட்டம், 1951-இன் 60-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்தார்.