நடிகர் சங்க தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. முன்னதாக இந்த தேர்தலை ரத்து செய்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ந் தேதி நடத்தி கொள்ள அனுமதி வழங்கியது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பெஞ்சமின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஒருவேளை நேரடியாக வாக்களிக்க விரும்பினால், வாக்குப்பதிவுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறினார்.

தேர்தல் அதிகாரியின் இந்த நிபந்தனை, சங்க விதிகளுக்கு எதிராக உள்ளது. மேலும், தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்‘ என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் ஏழுமலை என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் சங்கம் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு பட்டியலிட தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது நடிகர் சங்கம் தரப்பில், ‘கடந்த ஜூன் 23-ந் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரப்பட்டு வருகிறது.

எனவே, வாக்கு எண்ணிக்கை நடத்த உடனே உத்தரவிட வேண்டும்‘ என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற15-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ‘நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் வாதங்களை முன்வைத்தாலும், இல்லாவிட்டாலும், அன்றைய தினம் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்‘ என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools