நடிகர் சங்க தேர்தல் – மீண்டும் போட்டியிடுவதாக நாசர் அறிவிப்பு

நடிகர் சங்க செயற்குழுவில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் மீண்டும் எங்கள் அணி போட்டியிடும் என்றும் நாசர் அறிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், அஜய்ரத்னம், சரவணன், மோகன், உதயா, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீமன், குட்டி பத்மினி, சங்கீதா, லலிதகுமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) அவரிடம் ஒப்படைப்போம். தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools