நடிகர் சிவாஜி கணேசன் குடும்ப சொத்து விவகாரம் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர்.

சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமாரும், பிரபுவும் ஏமாற்றி விட்டனர். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நடிகர் பிரபு தரப்பும். சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது என்று தனியார் கட்டுமான நிறுவனமும் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு விளக்கத்தை ஏற்று சிவாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools