நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நடிகை திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டன குரல் எழுப்பினர்.

இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா, “தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்” என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema