நம் குடியுரிமையை தற்காத்து கொள்ளும் நேரம் இது – கமல்ஹாசன் பேச்சு

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம், நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்து கொள்ளும் நேரம் இது.

கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு பிரதானமாக தெரி கிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். ஆனால் லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, பேரணியாக சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools