நாகை, தஞ்சை கலெக்டர்களுக்கு விருது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா. ஆனந்த குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அளவிலான தேர்வுக்குழுவை மாற்றியமைத்து ஆணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருது வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்குவதற்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அந்த விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஜூலை 15-ந் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விண்ணப்பங்களை உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனையின்படி தமிழக அரசின் விருதாளர்களை முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்ததற்காக, சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கும், நாகை மாவட்ட கலெக்டர் அ.அருண் தம்புராஜுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த மருத்துவர் விருது, உதகை, மலைவீதி, மருத்துவமனை குடியிருப்பைச் சேர்ந்த டாக்டர் பா.ஜெய்கணேஷ் மூர்த்திக்கும்; சிறந்த நிறுவனத்துக்கான விருது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், களமாவூர் ரெனேசான்ஸ் அறக்கட்டளைக்கும்; சிறந்த சமூக பணியாளர் விருது, மதுரை எஸ்.எஸ்.காலனி சு.அமுதசாந்திக்கும்; மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்துக்கான விருது, புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை, அலம்பட்டி, மதுரை-தேனி சாலையில் உள்ள டாபே ஜெ ரிஹாப் சென்டர் நிறுவனத்துக்கும்; சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது கலெக்டர்கள் தவிர மற்றவர்களுக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools