நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுப் பெறுகிறது. இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பரப்புரை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், நாடு காக்க- நாடு காக்க – நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய, பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காபாற்ற நடக்கிற தேர்தல்.

மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ, உங்கள் வாக்கு தான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரேன் என்று உங்களுக்கே தெரியும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பேருந்தில் மகளிர் இலவச பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools