நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் இந்த சட்டசபை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் தகவல்

சட்டசபையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நீட் பிரச்சனையை குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய பேச்சில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய உறுப்பினர் உதயநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.

எனவே, அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, அதற்குரிய விளக்கங்களைப் பெறலாம்.

ஆனால், முக்கியமான ஒன்று. ‘நீட்’ பிரச்சனை குறித்து அவர் இங்கே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார். நீட் பிரச்சனையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம் இருக்கிறோம்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதி மொழி தந்தோம். ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் நம்முடைய லட்சியமாக இருக்கும். அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இது பற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலே ஒரு குழு அமைத்தோம். அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார்.

தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக் கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools