நீட் தேர்வு சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

நீட் தேர்வு சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மருத்துவம், பன்மருத்துவம், இந்திய மருத்துவம், ஒமியோபதி உள்ளிட்டவற்றின் சட்ட மாற்றங்களின் அடிப்படையில் இதன் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்த தேர்வால் சமூக பொருளாதாரம், கூட்டாட்சி அரசியல் பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் மாநிலத்தில் பிற பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

நீட் நுழைவு தேர்வு தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழகத்தின் சுகாதார அமைப்பு மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் பணியமர்த்த முடியாமல் போகலாம். கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போகலாம் என்று உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது.

இத்துடன் தேவையான சட்டம் அல்லது சட்டமன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவது மூலம் நீட் தேர்வை நீக்குவதற்கு மாநில அரசானது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று உயர்மட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நீட் தேர்வு சமூகத்தின் செல்வாக்குமிக்க பிரிவினருக்கு சாதகமாக இருப்பதால் நீட் தேர்வு நேர்மையான, நடுநிலையான சேர்க்கை முறை அல்ல என்பது உயர்மட்டக்குழுவின் அறிக்கையில் தெளிவாகி உள்ளது. எனவே மாநில அரசானது உயர்மட்ட குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு சமூக நீதியை முடிவு செய்யும் நோக்கில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஒமியோபதி போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது தகுதி தேர்வில் அதாவது மேல்நிலை தேர்வில் (12-ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில சட்டமன்ற பேரவையில் சட்டம் இயற்றப்படுகிறது. இந்த சட்டம் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான செயற்கை சட்டம் என வழங்கப்பெறும். எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒதுக்கீடு செய்வதற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஒரு அதிகார அமைப்பு செயல்படும்.

பல்வேறு குழுமங்கள் அல்லது அதிகார அமைப்பினால் நடத்தப்பட்ட தகுதி தேர்வு தொடர்புடைய பாடங்களில் மாணவர்களுக்கு தரப்பட்ட மதிப்பெண்களானவை மாநில குழுமத்தில் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் அதே பாடங்களில் மாணவரால் பெறப்பட்ட மதிப்பெண்களுடன் நெறிப்படுத்துதல் முறையை மேற்கொண்டு சமநிலைப்படுத்துதல் வேண்டும்.

அதாவது மாநில குழுவால் நடத்தப்படும் தேர்வு அதற்கு இணையாள அமைப்பு தேர்வு ஆகியவற்றில் பாடத்தில் ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

மாநில குழுமத்தின் மாணவரால் இயற்பியலில் பெறப்பட்ட மதிப்பெண் 100ஆகவும், பிற குழுமத்தின் மாணவரால் அதே பாடத்தில் பெறப்பட்ட மதிப்பெண் 96 ஆகவும் இருந்தால் இவ்விரண்டு உயர்ந்தபட்ச மதிப்பெண்களும் 100-க்கு சமமாக கருதப்படும்.

பிற குழுமத்தின் மாணவர் இயற்பியலில் 80 மதிப்பெண் பெற்றிருந்தால் அதே குழுமத்தின் இயற்பியலில் முதல் மதிப்பெண் 96 ஆக இருக்கையில் 80 மதிப்பெண்கள் 83.33 மதிப்பெண்களுக்கு சமமாக கருதப்படும்.

பொதுவான தகுதி பட்டியலில் சமமான மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare