X

நேரடியாக உலககோப்பையில் விளையாடும் ஸ்மித், வார்னர்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித், வார்னர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்போது கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், துணைக் கேப்டனாக திகழ்ந்த வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டியில் விளையாட ஒரு வருடம் தடைவிதித்தது. இந்த தடைக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 24-ந்தேதியும், 3-வது போட்டி 27-ந்தேதியும், 4-வது போட்டி 29-ந்தேதியும், ஐந்தாவது போட்டி மார்ச் 31-ந்தேதியும் நடக்கிறது.

ஸ்மித், வார்னர் 4-வது போட்டியில் இருந்து பங்கேற்கலாம். முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

அதில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இருவரும் உலகக்கோப்பையின்போது நேரடியாக சர்வதேச போட்டியில் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sports news