X

நேர்கொண்ட பார்வை- திரைப்பட விமர்சனம்

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் இந்திப் படமான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ எப்படி என்று பார்ப்போம்.

பார்ட்டி, மது, ஆண்களுடன் சகஜமாக பழகுவது என்று மாடர்னாக இருக்கும் ஷரத்த ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகிய மூன்று தோழிகளும் தங்களது ஆண் நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் போது, அதில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்கு முயற்சிக்க, ஆத்திரத்தில் அவரை மது பாட்டிலால் ஷரத்தா தாக்கிவிடுகிறார். அதன் பிறகு, அரசியல் செல்வாக்கு மிக்க அந்த வாலிபர், ஷரத்தா ஸ்ரீநாத்துக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இதனால், ஷரத்தா ஸ்ரீநாத் போலீசில் புகார் அளிக்க, போலீசோ அரசியல்வாதி வீட்டு பையனை காப்பாற்றுவதற்காக ஷரத்தா ஸ்ரீநாத் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதோடு, மூன்று பெண்களும் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்ட, வழக்கறிஞரான அஜித், அப்பெண்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எப்படி பொய்யாக்கி, அந்த வாலிபருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கிறார் என்பதே படத்தின் கதை.

இந்தி ’பிங்க்’ படத்தையும், இப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்காமல், இதை ஒரு தமிழ்ப் படமாக, அதுவும் அஜித் என்ற மாஸ் ஹீரோவின் படமாக பார்த்தால், நிச்சயம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அஜித் இதுவரை நடித்த படங்களில் முற்றிலும் வித்தியாசமான படம் என்பதை விட, இது அஜித் படமே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு தான் அஜித்தின் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அஜித் முழுமையாகவே கொடுத்திருக்கிறார். இருப்பினும், வழக்கறிஞர் என்ற வலிமை மிக்க கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கும் போது, பெரிய எதிர்ப்பார்ப்போடு வரும் ரசிகர்களை அஜித் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. அதற்கு திரைக்கதையிலும் வாய்ப்பில்லை. இருந்தாலும், பெண்களுக்கான ஒரு படத்தில் அஜித் போன்ற மாஸ் ஹீரோ நடித்தது வரவேற்கத்தக்கது தான்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சாதாரண பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தங்களது நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள். அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, நீதிமன்றத்தில் வாதிடும் ஆரம்ப காட்சிகளில் சற்று ஓவராக நடித்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதை சரி செய்துவிடுகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை பெரிய அளவில் கவனிக்க வைக்கவில்லை என்றாலும் காட்சிகளுடன் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அஜித்தின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களையும் ரசிகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோ இப்படிப்பட்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும், என்ற இமேஜை உடைத்தெரிந்துவிட்டு, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களிலும் நடிக்கலாம் என்பதை ஆரம்பத்திருக்கும் அஜித்தை, அவரது ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் எச்.வினோத் ஒரு ஆக்‌ஷன் காட்சியை வைத்திருக்கிறார். ஆனால், அந்த ஆக்‌ஷன் காட்சி ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் நீளத்தால் திணிக்கப்பட்ட காட்சியாகி விடுகிறது.

மாடர்னாக இருக்கும் பெண்கள் தவறானவர்கள் அல்ல, என்பதை பேசும் திரைக்கதை, மனைவியாக இருந்தாலும், அவர் அனுமதிக்காமல் அவளை தொடக்கூடாது, அப்படி தொட்டாள் அது குற்றம் தான், என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

இந்த கதையின் நாயகன் வயதானவராக இருக்க வேண்டும், என்ற எந்த அவசியமும் திரைக்கதையில் இல்லை. இருப்பினும் அஜித்தை இயக்குநர் ஏன் வயதனாவராக காட்டியிருக்கிறார், என்று தெரியவில்லை. அதேபோல், அஜித்துக்காக சொல்லப்பட்டிருக்கும் மனைவி பிளாஷ்பேக் தமிழ் சினிமாவின் பழங்காலத்து ரீலாக இருக்கிறது.

நல்ல மெசஜ் சொல்லியிருக்கும் படம் தான். ஆனால், அந்த மெசஜை அஜித் என்ற பெரிய நடிகர் மூலம் சொல்லும் போது, இன்னும் கொஞ்சம் அழுத்தமாக, அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் சொல்லியிருக்கலாமே, என்றும் நினைக்க தோன்றுகிறது.

அஜித்தை வித்தியாசமாக பார்க்க நினைப்பவர்களுக்கு இப்படம் ஒரு புது அனுபவம் தான். ஆனால், அவரை அஜித்தாகவே பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றமே.

-விமர்சனக் குழு