X

படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டைரக்டர் பாரதிராஜா அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.

பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர், தயவு கூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்“

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.