X

பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது – பிரதமர் மோடி பேச்சு

ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றுநோய் பரவி உள்ள இந்த நேரத்தில், வேலை கலாச்சாரத்துடன், வேலையின் தன்மையும் மாறிவிட்டது. எப்போதும் மாறிவரும் புதிய தொழில்நுட்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாறிவரும் காலங்களில் இளைஞர்கள் புதிய திறன்களைப் பெறுகின்றனர்.

திறன் என்பது நாம் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு, அது அனுபவத்துடன் வளர்கிறது. திறன் தனித்துவமானது, இது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். வேலை வாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. வேலை மட்டுமின்றி செல்வாக்கு ஊக்கத்தையும் திறன் வழங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.