பள்ளிகள் திறப்பிற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – உலக வங்கி கல்வி இயக்குனர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உலக வங்கியின் உலகளாவிய கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கருத்து தெரிவித்துள்ளார். பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

மாணவர்களின் கற்றல் இழப்பை தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.  தொற்று நோயை கருத்தில் கொண்டு பள்ளிகளை மூடுவதற்கு இப்போது எந்த நியாயமும் இல்லை. புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவது இதுவே கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.  பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையை எந்த நாடும் வைக்கவில்லை. இதற்குப் பின்னால் அறிவியல் எதுவும் இல்லை, பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில் இதில் எந்த அர்த்தமும் இல்லை. உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து இருக்கும்போது, பள்ளிகளை மூடி வைத்திருப்பது அர்த்தமற்றது. பல நாடுகள் பள்ளிகளை திறந்துள்ளன.

பள்ளிகள் மூடப்பட்டபோது பல மாவட்டங்களிலும் கொரோனா அலைகள் இருந்தன.  பள்ளிகள் மூடப்படுவதால் இந்தியாவில் கற்றல் குறைபாடு 55 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது.

கற்றல் குறைபாடு அதிகரிப்பு, இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் குடும்ப பொருளாதார வாழ்வில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.  இவ்வாறு  உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools