X

பஸ்கள், ரெயில்கள் வழக்கம் போல் ஓடும் – பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த அறைகூவலை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்று மாநில அரசு ஊழியர்களுடன் இணைந்து வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்தியது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், அரசு ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆட்டோ, சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என சுமார் 2 கோடி பேர் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படக்கூடும், குறிப்பாக பொது போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அதனை தடுக்க போக்குவரத்து துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பஸ் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், விடுமுறை இருப்பவர்களும் வேலைக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை மட்டுமே அரசு பஸ்களை இயக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

28-ந்தேதி அதிகாலையில் இருந்து பஸ்களை இயக்குவதில்லை என்ற முடிவில் தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்க டிரைவர், கண்டக்டர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 19 ஆயிரம் அரசு பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக தினமும் இயக்கப்படுகின்றன.

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. பஸ்கள் நிறுத்தப்படுகின்ற பணிமனைகள் முன்பு போலீசாரை நிறுத்தி இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் செய்துள்ளார்கள்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பஸ்களில் பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 62 சதவீத பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கிராம புறங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 18ஆயிரத்து 177 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் தங்கராஜ் கூறும்போது, தமிழகத்தில் 4,500 தனியார் பஸ்கள் தினமும் இயக்கப்படும். இந்த வேலை நிறுத்தத்திற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. அதனால் தனியார் பஸ்கள் முழுமையாக இயங்கும் என்றார்.

இதே போல ரெயில் போக்குவரத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வழக்கம் போல அனைத்து ரெயில்களும் ஓடும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தினமும் இயக்கப்படும் ரெயில்கள் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு செல்லும். வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களும் குறித்த நேரத்தில் இயக்கப்படும். ரெயில் மறியல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரெயில் நிலையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

முழு வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி ரெயில், பஸ் போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் 28, 29 ஆகிய இரண்டு நாட்களும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் பஸ் டெப்போக்கள் முன்பு அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களும் எந்தவித இடையூறுமின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட டெப்போக்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “முழு அடைப்பின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் மாவட்ட சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நிலைமைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர். இதே போன்று மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் 2 நாட்களும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.