பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது.

இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்படும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools