பா.ஜ.கவுக்கு எதிராக 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், ‘அனைத்துத் திருடர்களும் ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டிருப்பது எவ்வாறு எனத் தெரியவில்லை’ என்றார்.

ராகுலின் இந்தக் கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வும், மாநில முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த விவகாரத்தில் இந்திய தண்டனையியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா விசாரித்து வந்தார். ராகுல் காந்தி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான தனது தரப்பு கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா வியாழக்கிழமை வெளியிட்டார்.

வழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பில், ‘மக்களவை உறுப்பினரால் (ராகுல்) தெரிவிக்கப்பட்ட கருத்து மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நபர் சார்ந்து அவர் பேசியிருக்கலாம்.

ஆனால், வேண்டுமென்றே பொதுவாக அவர் தெரிவித்த கருத்து, மோடி சமூகத்தினருக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையாகும். முறையற்ற கருத்து தெரிவித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அவர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார். அப்படியிருந்தும், அவரது நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவருக்குக் குறைந்த அளவிலான தண்டனை வழங்கினால், அது தவறான செய்தியை மக்களிடம் சேர்ப்பதாகவும் சட்ட விதியை மதிக்காததாகவும் அமையும்’ என்று குறிப்பிட்டார். அதே வேளையில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.

ராகுல் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று 14 கட்சிகள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசிய மாநாடு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 14 கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட்டு இருந்தன.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நாங்கள் எந்த வழக்கு விசாரணையையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கோரவில்லை. அதே சமயத்தில் வழக்கு விசாரணை நடவடிக்கைக்கு முன்பு நடைமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவி விடப்பட்டு மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுவை 14 கட்சிகள் சார்பில் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்தார். 14 கட்சிகளின் சார்பில் அவர் நீதிபதிகளிடம் முறையிட்டு பேசினார். இந்த முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏப்ரல் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools