பா.ஜ.க அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் 17 ஆம் தேதி ஆர்பாட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்வில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பினை மறுக்கப்படுவதை உணர்ந்த தி.மு.க. தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணித்தே தீருவேன் என்றும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் இந்தியை மட்டுமே கட்டாயமாக்குவேன் என்றும், இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் கருதப்படும் என்றும் பாசிச பா.ஜ.க. அரசு சர்வாதிகார தன்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதுதான் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே முழக்கமாகும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என்று பாசிச, சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்கிட, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம், “சாஸ்திரி பவன்” அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இதில் தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணியினர் மற்றும் கழக சார்பு அணிகளின் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வதோடு, தெற்கில் ஒலிக்கும் நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட அணி திரண்டு வாரீர். வாரீர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools