X

பா.ஜ.க வுடன் கூட்டணி! – அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்குமா? அல்லது அ.தி.மு.க. தனித்து களம் இறங்குமா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டணி பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிதான் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு தான் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும். தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று கூறி இருந்தார்.

ஆனால் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் கூறுகையில், கூட்டணி வி‌ஷயத்தில் ஜெயலலிதா பாதையில் (தனித்துப்போட்டி) செல்வோம். பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்று அ.தி.மு.க.வில் யாரும் சொல்லவில்லை என்று கூறி உள்ளனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசித்தார்.

அப்போது பெரும்பாலான அமைச்சர்கள், பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் சொல்லி தான் நாம் ஓட்டு கேட்க முடியும். இதற்கு ஜெயலலிதா பாணியில் கடந்த தேர்தல் போல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் நமக்கு கிடைக்கும் ஓட்டும் கிடைக்காமல் போய்விடும். பா.ஜனதா எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அதை அரசியல் ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம்.

எனவே கூட்டணி வி‌ஷயத்தில் பா.ஜனதாவை சேர்க்க வேண்டாம். மற்ற கட்சிகளை சேர்த்தால் விமர்சனம் வராது. பா.ஜனதா என்றால் மதவாத கட்சி என்று விமர்சனம் செய்வார்கள். இதை எதிர்கொண்டுதான் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும்.

எனவே தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமையும்போது அ.தி.மு.க. ஆதரவு தரும் என்ற வகையில் உறுதி கொடுக்கலாம்.

பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க. வுக்கு வெற்றி வாய்ப்புள்ள கொங்கு மண்டலத்தில் கோவை, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட 12 தொகுதிகளை பா.ஜனதாவினர் கேட்டு பெறுவதில் குறியாக இருப்பார்கள்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதாவுக்கு கொடுப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள்.

எனவே தேர்தல் கூட்ட ணியில் அம்மா பாணியை பின்பற்றுகிறோம் என்று சொல்லி பா.ஜனதா மேலிடத்தை சமாதானம் செய்து கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பெரும்பாலான அமைச்சர்கள் கூறிய ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உன்னிப்பாக கேட்டார்கள்.

40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியை முடுக்கி விடுமாறு மாவட்ட செயலாளர்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகளுக்கும் நாங்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். நீங்களும் கீழ்மட்ட நிர்வாகிகளை அரவணைத்து தேர்தல் பணியை கவனியுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்.