பிரதமர் மோடி மார்ச் 4 ஆம் தேதி சென்னை வருகிறார்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார்.

காசி தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் பாரம்பரிய செங்கோல் நிறுவியது போன்றவற்றால் எதிர்ப்பு மறைந்து தமிழர்கள் மத்தியிலும் மோடி ஆதரவு வளர தொடங்கியது. இந்த நிலையில் வட மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் எம்.பி.க்கள் வெற்றி பெறாதது டெல்லி தலைவர்கள் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது.

எனவே இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே ரகசிய சர்வே நடத்தி 10 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர் தேர்வு பிரசார திட்டங்களையும் வகுத்துள்ளார்கள். தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பிரதமர் மோடியும் தமிழகம் முழுவதும் ரவுண்டு கட்டும் வகையில் பல கட்ட பயண திட்டத்தை வகுத்துள்ளார்.

வருகிற 27-ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி சில முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

மறுநாள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த முதற்கட்ட பயணத்தில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்ட பயணத்தை முடித்த பிறகு மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடுத்தடுத்து வருவார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் மோடி தமிழகம் வருவது உறுதியாகி இருக்கிறது. 4-ந் தேதி (திங்கள்) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பொதுக் கூட்டத்துக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடல், பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் இடத்தை பார்த்து உறுதி செய்த பிறகு, இடம் முடிவாகும் என்றார்கள். சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்

அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தமிழகத்தை குறி வைத்து பா.ஜனதா காய் நகர்த்துவதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools