பீலா ஐ.ஏ.எஸ் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.

அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools