புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெளிநாட்டினர்

புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவை எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்துக்கு இதே போல் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இதேபோன்ற மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதே போல் கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மோப்பநாய் பிரிவினர் கவர்னர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தினர். அவை போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது. இந்த 4 மிரட்டல் மின்னஞ்சல்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாக கொண்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரி, பிரெஞ்சு துணைத்தூதரகம், மாவட்ட கலெக்டர் அலுவலங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேரடியாக மிரட்டுவதற்கு பதிலாக முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு மிரட்டலை அனுப்பியிருத்தனர். ஆனால் இந்த 4 சம்பவங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் டார்க் நெட்டை பயன்படுத்தியதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்ட போலீசார் மத்திய அரசின் நிறுவனங்களில் தொடர்பில் உள்ளனர். மேலும் விசாரணை விரிவானதாகவும் ஒருங்கிணைத்த முறையிலும் இருக்க வேண்டும் என்பதால் மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைத்த மையத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ளனர். மர்ம நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு புதுச்சேரி காவல்துறை இ-மெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரத்தில் மின்னஞ்சலை அனுப்பியவர்கள் எல்லை தாண்டிய (வெளிநாடு) அதிகார வரம்பைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

எனவே வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools