X

பெங்களூரில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார். போட்டியை முடித்துக் கொண்டு மார்ச்சில் அவர் தாயகம் திரும்ப வேண்டியது. அதற்குள் கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் 3 மாதங்கள் அங்கு தவித்தார். ஆன்லைன் செஸ் போட்டியில் பங்கேற்பு, வர்ணனையாளர் பணி, சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களுடன் கலந்துரையாடல் என்று நேரத்தை செலவிட்டார்.

தற்போது பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக நேற்று முன் தினம் இந்தியாவுக்கு திரும்பினார். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூருவுக்கு நேற்று பிற்பகல் முன் தினம் வந்தடைந்த ஆனந்த் கர்நாடகாவில் பின்பற்றப்படும் நடைமுறைப்படி கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பிறகு சென்னைக்கு சென்றதும் அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆனந்தின் மனைவி அருணா கூறுகையில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சொந்த நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் முடிந்ததும் அவர் சென்னைக்கு வருவார்’ என்றார்.

Tags: sports news