X

பெங்களூர் அணிக்கு ஆதரவு அளியுங்கள் – ரசிகர்களிடம் கோலி கோரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக மோசமாக இருக்கிறது. அந்த அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை.

கடந்த 3 ஐ.பி.எல். போட்டியில் அந்த அணி 2 முறை கடைசி இடத்தை பிடித்தது. 2017-ல் 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும், 2019-ல் 8-வது இடத்தையும் பிடித்து பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவர், கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணியின் நிலை ஐ.பி.எல்.லில் பரிதாபமாக உள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அணி நிர்வாகம் அதை நிராகரித்தது.

மேலும் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்குமா? என்ற நிலையும் ஏற்பட்டது.

ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ரசிகர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

அணியை கட்டமைப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். வலுவான அணியை உருவாக்கி 2020 ஐ.பி.எல். சீசனில் நன்றாக ஆடத்தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்வோம்.

எனவே ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை.

உங்களின் (ரசிகர்கள்) ஆதரவுதான் அணிக்கு விலை மதிப்பில்லாதது. ஆகவே நன்றியை தெரிவிக்கிறேன். நாளை நடைபெறும் ஏலத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

இந்த ஏலம் அணிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். நிர்வாக குழுவில் உள்ள மைக் ஹெசன், சைமன் கேடிச் பிரமாதமாக பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: sports news