பெண்கள் உலக கோப்பை ஹாக்கி – இந்தியா, சீனா இன்று மோதல்

15-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

இந்த நிலையில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 13-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. சவிதா பூனியா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் தடுப்பு ஆட்டத்தில் அருமையாக செயல்பட்டது. ஆனால் இந்திய அணியின் முன்கள வீராங்கனைகள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

அத்துடன் இந்திய அணி 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றியது. எனவே இந்திய அணியின் முன்கள வீராங்கனைகள் இன்னும் துடிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். சீனா அணியை பொறுத்தமட்டில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் (2-2) டிரா செய்தது. சமீபத்தில் நடந்த புரோ ஹாக்கி லீக் போட்டியின் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி, சீனாவை துவம்சம் செய்து இருந்தது.

இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். முதல் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools