X

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடை கொண்டுள்ளது – ஜி.கே.வாசன் கருத்து

கோவை சூலூர் சின்னியம்பாளையத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இரட்டை வேடத்தின் உச்சகட்டமாக பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது வேதனையளிக்கிறது.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான நாளன்று ஊட்டி சென்ற முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாகவும், இது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் உணர்வுகளுக்கு 100 சதவீதம் எதிராகவும் அமைந்துள்ளது.

நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 கோடிக்கு மேலான உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்னர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கலால் வரியை குறைத்தது போல மாநில அரசும் குறைக்க வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும்.

அ.தி.முக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தி.மு.கவை எதிர்த்து வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மத்தியிலே பா.ஜ.கவுடன் கூட்டணி. மாநிலத்திலேயே அ.தி.மு.கவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது.

தேங்காய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. இதனால் பல லட்சம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய-மாநில அரசுகள் தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை நம்பியுள்ள விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.