X

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர் விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலே செல்லத்தொடங்கி விடுவார்கள்.

அதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 11-ந்தேதி முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயங்ககூடிய 2275 பஸ்களுடன் கூடுதலாக 5163 சிறப்பு பஸ்களையும் சேர்த்து 4 நாளில் மொத்தம் 14 ஆயிரத்து 263 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி நகராட்சி பஸ் நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக கே.கே. நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.

மற்ற ஊர்களில் இருந்து 4 நாட்களில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை மொத்தமாக 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக 7841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு பஸ்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 26 சிறப்பு முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையமும், மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முன்பதிவு மையங்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து , திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

கனரக வாகனங்களின் இயக்கம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மதியம் 2 முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து வழித்தட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

குறிப்பாக, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை, திண்டிவனத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுவது பொது மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொது மக்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன், திருவண்ணாமலைக்கு சென்றிட பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதால், இது பயணம் செய்திட பொது மக்களுக்கு மிக எளிதாக உள்ளது.

மேலும் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது’’.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 4.92 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். அதன் முலம் ரூ.17.47 கோடி வருமானம் கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பிறகு பயணிகள் முன்பதிவு செய்யத் தொடங்கினார்கள். இந்த முன்பதிவு மையங்கள் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.