X

பொங்கல் பரிசுக்கு எதிராக வழக்கு!

பொங்கல் பண்டிகைக்காக அரிசி ரே‌ஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ. 1000 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மீதம் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘அ.தி.மு.க.வினர் தாங்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தால் தான் இலவச பொருட்கள் பெற டோக்கன் வழங்கப்படும் என்று வாக்கு சேகரிக்கின்றனர்.

வாக்காளர்கள் இலவச பொருட்களுக்காக அ.தி.மு.க.வினருக்கு ஓட்டு போடும் நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இலவச திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் நடத்தை வீதி மீறல் செயல்.

எனவே பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு செயல்படுத்த வேண்டும்’ என கூறி இருந்தார்.

இந்த மனு விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்க வில்லை. தேர்தல் அறிவிக்கப்படாத 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இன்று திருவண்ணாமலையை சேர்ந்த அலமேலு தரப்பில் வழக்கறிஞர் மணிவாசகம் என்பவர், நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் ஒரு முறையீடு செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்குவது மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வகை செய்யும் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படும் என நேற்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது வாய்மொழி உத்தரவாக இருப்பதால் உரிய உத்தரவுகள் பிறப்பித்து நீதிமன்றத்தில் உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.

Tags: south news