பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தேசிய தன்னார்வ ரத்த தான நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின் போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனை ரும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம்.

ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. பொது மக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools