X

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பிரபல மலையாள நடிகை!

திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி பாபு (வயது 22). இவர் மலையாள சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் ஏராளமான டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். படப்பிடிப்புகளுக்கு செல்ல வசதியாக தற்போது கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இவருக்கும், போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நடிகை வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கார் பார்க்கிங்கில் வைத்து நடிகை அஸ்வதி பாபு ஒருவருக்கு போதை மருந்தை விற்பனை செய்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கார் டிரைவர் பினோய் ஆபிரகாம் (38) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

நடிகை மற்றும் டிரைவரிடம் இருந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த போதை பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருளை பயன்படுத்தினால் 12 மணி நேரம் போதை இருக்கும் என்பதால் இதற்கு கடும் கிராக்கியும் இருந்துள்ளது.

தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளதால் போதை பொருளை பயன்படுத்தும் பலர் நடிகையை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் நடிகை போதைப்பொருளை அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

நடிகை அஸ்வதி பாபு கூறுகையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் இந்த போதை மருந்தை கடத்தி வந்து விற்பனை செய்தததாக தெரிவித்துள்ளார். நடிகையின் பின்னணியில் உள்ள போதை பொருள் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் நடிகையிடம் போதை பொருள் வாங்கியவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.