X

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியல் போலி – கங்கனா ரணாவத் சகோதரி புகார்

போர்ப்ஸ் பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். ரஜினிகாந்த் 13வது இடத்திலும், விஜய் 47, அஜித் 52, ஷங்கர் 55, கமல்ஹாசன் 56, தனுஷ் 64வது இடத்திலும் இருந்தனர்.

அந்தப் பட்டியலில் ஹிந்திப் பட நடிகையான கங்கனா 17.5 கோடி ரூபாய் வருமானத்துடன் 70வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலுக்கு கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ”இந்த ஆண்டில் தன்னுடைய வருமானம் எவ்வளவு என்பது கங்கனாவுக்கே தெரியாது. அவருடைய அக்கவுண்ட் குழுவினருக்கும், எனக்கு மட்டும்தான் தெரியும். அவை மிகவும் ரகசியமானவை. அதைப் பற்றிய விவரங்களை கங்கனாவுக்குத் தெரிவித்து விடுவோம்.

போர்ப்ஸ் இந்தியா இந்த விவரங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இடம் பிடித்த தொகையை விட கங்கனா வருமான வரி கட்டியது அதிகம். இது ஒரு போலியான பட்டியல். எதன் அடிப்படையில் இதுதான் வருமானம் என்று நீங்கள் பட்டியலிட்டதைப் பற்றி பதில் சொல்லுங்கள்,” எனக் கேட்டிருக்கிறார்.

அவர் சொல்வதைப் பார்த்தால் 13வது இடத்தில் ரஜினிகாந்த் மற்ற இடங்களில் உள்ளவர்களின் பட்டியல் அனைத்தும் தவறானவையாகவும் இருக்கலாம். ஒருவருடைய வருமானம் எவ்வளவு என்பது வருமான வரித்துறைக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் போலி கணக்கு காட்டும் பிரபலங்கள் நிறைய பேர் இருப்பார்கள்?.